லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது வழக்கம்தான் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீன ராணுவம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் புதிய சாலைகள் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பாலங்கள் அமைக்க கட்டுமானப் பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆட்சேபத்தை இந்தியா தெரிவித்துள்ளது.
சீன விமானப்படையினர் எந்தவித அத்துமீறலிலும் ஈடுபட முயற்சிக்க வேண்டாம் என்று இந்தியா சார்பில் ஏற்கனவே சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன விமானங்கள் எல்லையில் ஊடுருவ முயற்சித்த போது இந்திய விமானப் படையினர் உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்தி சீனப்படையினரை திரும்பிச் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர். எல்லையை ஒட்டி 10 கிலோமீட்டர் தூரம் வரை எந்த சீன விமானமும் பறக்கக் கூடாது என்று கடுமையான முறையில் சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.