நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடங்கள், 9 விநாடிகளில் முழுவதுமாக தகர்க்கப்பட்டன. கட்டட இடிப்பால் அருகில் இருந்த குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என நொய்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டில் குடியிருப்புகளை கட்ட, சூப்பர்டெக் என்ற நிறுவனத்திற்கு உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா நிர்வாகம், செக்டார் 93ஏ என்ற பகுதியில் நிலம் ஒதுக்கியது. கடந்த 2005ஆம் ஆண்டில் தலா 10 தளங்களுடன் கூடிய 14 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அந்த திட்டம் தயாரிக்கப்பட்டு, நொய்டா கட்டுமான நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி ஒப்புதல் அளிக்கப்பட்டது. 37 மீட்டர் உயரத்திற்கு மேல் அக்கட்டிடத்தின் உயரம் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து 2006ஆம் ஆண்டில் கட்டுமானத்துக்காக கூடுதல் நிலம் ஒதுக்கப்பட்டு, ஏற்கனவே சொல்லப்பட்ட அதே விதிகளுடன், கட்டடங்கள் கட்ட புதிய திட்டம் தீட்டப்பட்டது. பின்னர், 2012ஆம் ஆண்டில் அந்த திட்டம் திருத்தப்பட்டு, 2 கட்டடங்களிலும் தலா 40 தளங்கள் வரை கட்டப்பட்டன.
இந்நிலையில், இந்த இரட்டை கோபுரங்கள், நொய்டா விதிகளை மீறி கட்டப்பட்டதாகவும், அந்த கட்டுமானம் சட்டவிரோதமானது என்றும் கூறி, குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தோட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமாக இந்த இரண்டு கோபுரங்களும் எழுப்பப்பட்டுள்ளன என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 2014ஆம் ஆண்டில் குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்படி, இந்த கோபுரங்களை இடிக்க வேண்டும் என்றும் இடிக்கும் செலவை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே இங்கு வீடு வாங்கியவர்களுக்கு 14% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை நிராகரித்த உச்சநீதிமன்றம், கோபுரங்களை இடிக்கும் உத்தரவை உறுதி செய்தது.
இரட்டை கோபுர கட்டிடங்களுக்கு அருகே 9 மீட்டர் தொலைவில் அஸ்தெர் 2, அஸ்தெர் 3 ஆகிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இதனால், அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையில் இரட்டை கோபுர கட்டிடங்களை தகர்க்க திட்டமிடப்பட்டன.
'நீர் வீழ்ச்சி வெடிப்பு' என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மும்பையை சேர்ந்த எடிபிஸ் பொறியல் நிறுவனம் கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெட் டெமாலிஷன்ஸ் நிறுவனத்தின் நிபுணர்களுடன் இணைந்து அந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடந்தது. மொத்த கட்டிட இடிப்பு நடவடிக்கைகளும் நொய்டா நிர்வாகத்தினரின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
3 வெளிநாட்டு நிபுணர்கள் உள்பட 6 பேர், எடிபிஸ் நிறுவன திட்ட மேலாளர் மயுர் மேத்தா, கட்டிடங்களை தகர்ப்பவரான சேத்தன் தத்தா, ஒரு காவல் அதிகாரி ஆகியோர் மட்டுமே கட்டிடம் தகர்க்கப்பட்ட 'விலக்கு மண்டலம்' என்ற பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
100 மீட்டர் உயரத்தில் டெல்லி குதுப்மினாரை விட உயரமான அந்த கட்டிடத்தை தகர்க்க, கட்டிடத்தின் 20 ஆயிரம் இடங்களில் 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்துகள் கடந்த சில வாரங்களாக பொருத்தப்பட்டன. 40 மாடிகளில் சுமார் 915 குடியிருப்புகள் இருந்த அக்கட்டிடத்தை தகர்க்க சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, நொய்டா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், சுகாதார அவசர நிலைக்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. இரட்டை கோபுரங்களின் அருகே வசித்த சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி பிற்பகல் 2.30 மணியளவில் இரட்டைக் கோபுர கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. சுமார் 9 வினாடிகளில் அந்த கட்டிடங்கள் தரைமட்டமாகி கட்டிடக் கழிவுகளாகின.
வெடிபொருட்களின் உதவியுடன் கட்டிடம் தகர்க்கப்பட்டபோது, அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளை தூசுமண்டலம் சூழ்ந்தது. மேலும், அக்கட்டிடம் தரைமட்டமானபோது, அருகாமையில், மொட்டை மாடிகளில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில், இரட்டைக் கோபுரக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும், கட்டிடத்தின் சில கழிவுகள் சாலைகளுக்கு அருகே விழுந்தததாக நொய்டா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.