இலவசத் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசுகள் பட்ஜெட் தொகையில் ஒதுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் , இலவசத் திட்டங்களின் சுமையை மற்றவர்கள் மீது மாநில அரசுகள் சுமத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல் கட்சிகள் அதனால் ஆட்சியைக் கைப்பற்றி அரசு அமைக்கும் போது தங்கள் பட்ஜெட்டில் இலவசத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
உதாராணமாக இலவச மின்சாரம் என்று அறிவிக்கும்போதே அதற்கான செலவு இழப்பு போன்றவற்றை கணக்கிட்டு அத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீத அளவுக்கு வளர்ச்சி காணும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாகவும், அடுத்த நிதியாண்டிலும் இதே அளவிலான வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடையும் என்று சர்வதேச நிதியமும் உலக வங்கியும் கணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார சூழல் தற்போதும் சவால்மிக்கதாக இருப்பதாகவும், உலகளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் ஏற்றுமதி கடினமான சூழலைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.