2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடையும் வகையில் வர்த்தகத் துறை மாற்றியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை இந்தியா அடைவதற்காக தனியார் ஆலோசனை முகமையிடம் இருந்து அறிக்கை ஒன்று பெறப்பட்டது.
எதிர்காலம் தயார் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையை வர்த்தகம், தொழில், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச சந்தையை விரிவுபடுத்தும் நாடுதான் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்தை சுட்டிக் காட்டிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 52 லட்சத்து 65 ஆயிரம் கோடியாக இருந்ததாகத் தெரிவித்தார்.
2030-ஆம் ஆண்டுக்குள் இதனை 2 டிரில்லியன் டாலர் அதாவது ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஏற்றுமதி, உலகம் முழுவதும் செல்லும் இலக்கை அடைவதற்கு மத்திய வர்த்தகத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் ஒரு பகுதியாக, வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு தனியாக அமைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்புடன் பேச்சுவார்த்தை திறனை வலுப்படுத்துவது, இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றுடன், மின்னணுமயமாக்கல், ஒற்றைச்சாளர முறை போன்ற வர்த்தகத்தை எளிதாக்கும் செயல்முறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க வெளிநாடுகளில் உள்ள 200 தூதரங்களை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும், வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்தார்.