சீனாவின் அத்துமீறல்களை தடுக்கவும் மீண்டும் கல்வான் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழாது இருக்கவும் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் தரைப்படையினரும், விமானப் படையினரும் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தினர் மற்றும் விமானப் படையினர் எந்த வித சவால்களையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். உள்பகுதிகளில் ராணுவத்தின் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இரவில் ரோந்துகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடுகளின் ஊடுருவல் ஆக்ரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள ராணுவத்தினர் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலமாக இந்திய விமானப் படையினரும் தரைப்படையினருக்கு உதவியாக 24 மணி நேரம் ரோந்து மேற்கொண்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. கிழக்கு லடாக் போன்ற மலைப் பகுதிகளில் உள்ள தட்ப வெட்ப நிலைகளில் இருந்து இந்தப் பகுதியில் தட்ப வெப்ப சூழல்கள் மாறுபடுவதை கவனத்தில் கொண்டு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லையில் எப்போதும் எந்த வித சவால்களையும் சந்திக்க இந்தியா தனது படைபலத்தை நிறுத்தி பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறது.