காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய விளையாட்டுத்துறையின் பொற்காலம் தொடங்கி விட்டதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றனர். மேலும், நடப்பு தொடரின் பதக்க பட்டியலிலும் இந்தியா 4ஆவது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். பின்னர் வீரர், வீராங்கனைகளை சந்தித்த பிரதமர், அவர்களுடன் கலந்துரையாடினார்.
வீரர்கள், வீராங்கனைகள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, மற்ற இந்தியர்களை போல் தானும் உங்களை சந்திந்து பேசுவதில் பெருமைப்படுவதாகவும், நீங்கள் வெற்றியுடன் திரும்புவீர்கள் என உறுதியாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும், இந்திய விளையாட்டுத்துறையின் பொற்காலம் தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார். காமன்வெல்த் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்தது, முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியது என கடந்த சில வாரங்களில் இந்திய விளையாட்டுத்துறை இரு முக்கிய சாதனைகளை பதிவு செய்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது மட்டுமின்றி, வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறிய மோடி, பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.