இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இலங்கைக்கு நேற்று வந்து சேர வேண்டிய சீனாவின் உளவுக் கப்பல், திட்டமிட்டபடி வந்து சேரவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பந்தோடா துறைமுகத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் வரும் 17ஆம் ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் வசதி கொண்ட இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, அக்கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. எனினும், சீனாவின் ஜியான்கியானில் இருந்து புறப்பட்டதாக கூறப்படும் அந்த கப்பல் இலங்கையின் அம்பந்தோடா துறைமுகத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, அம்பந்தோடா துறைமுகத்திலிருந்து சுமார் 599 கடல் மைல் தொலைவில் அந்த கப்பல் இருந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளரான ஜெனரல் கமால் குணரத்ன, சீனக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை என்றும் அது இலங்கைக்கு வருமா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கப்பல் விவகாரம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை துறைமுகத்தை அடையவிருந்த சீன கப்பலான 'யுவான் வாங் 5', தமது பயண வேகத்தை குறைத்ததாகவும், தொடர்ந்து 35 மணி நேரம் கடலில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.