இயற்கையைக் காப்பதில் உயிரி எரிபொருளுக்குக் குறிப்பிடத் தக்க பங்குள்ளதாகவும், உயிரி எரிபொருள் ஆலை அமைப்பதால் வேலைவாய்ப்பும் தொழில்வாய்ப்புகளும் உருவாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் பானிபட்டில் இந்தியன் ஆயில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 2 இலட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கும் திறனுள்ளது.
இதன்மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், வைக்கோலை எரிப்பது தவிர்க்கப்படுவதால் ஆண்டுக்கு 3 இலட்சம் டன் கார்பன் வெளியீடு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக உயிரி எரிபொருள் நாளையொட்டிப் பானிபட்டில் உள்ள எத்தனால் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இயற்கையைத் தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் இயற்கையைக் காப்பதில் உயிரி எரிபொருளுக்குக் குறிப்பிடத் தக்க பங்குள்ளதாகவும்,இதை விவசாயிகள் நன்கு புரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வைக்கோலை ஏற்றிவரும் போக்குவரத்து வசதியாலும், உயிரி எரிபொருள் ஆலை அமைப்பதாலும் வேலைவாய்ப்பும் தொழில்வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் ஊர்மக்களும் விவசாயிகளும் பயனடைவர் என்றும், நாட்டில் மாசுபாடு குறையும் என்றும் குறிப்பிட்டார்.
இலவசமாகப் பெட்ரோல் டீசல் வழங்குகிறோம் என யாராவது கூறினால் அது தன்னல அரசியலாகும் எனத் தெரிவித்தார். அது நாடு தற்சார்புநிலை அடைவதைத் தடுப்பதுடன், நம் பிள்ளைகளின் உரிமைகளையும் பறிக்கும் செயல் என்றும் தெரிவித்தார். இலவசங்கள் வழங்குவது மக்களின் வரிச்சுமையை மேலும் அதிகரிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.