மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-க்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்ததால், அம்மசோதாவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பினார்.
மசோதாவை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, குறைந்தபட்சம், அதிகபட்சம் கட்டணம் நிர்ணயிப்பதில் திருத்தம் கொண்டுவருவது போன்றவை மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.
இது குறித்து தெரிவித்த ஆர்.கே.சிங், மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்றும், மாநில அரசுகள் இலவச மின்சாரத்தையும், மானியத்தையும் வழங்கலாம் என்றும் கூறினார்.