குடியரசு துணை தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் 14ஆவது குடியரசு துணை தலைவராக வருகிற 11ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
வெங்கைய நாயுடுவின் பதவிக் காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாகப் பிரதமர் மோடி வாக்களித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றார். மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.
தேர்தலில் மொத்தம் பதிவான 725 வாக்குகளில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஜக்தீப் தங்கர், 528 வாக்குகள் பெற்று 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக மக்களவை பொதுச்செயலாளரான உத்பல் கே சிங் அறிவித்தார். தேர்தலில் மொத்தம் 15 வாக்குகள் செல்லுபடியாகாத நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்கரேட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், நாட்டின் 14ஆவது குடியரசு துணை தலைவராக வருகிற 11ஆம் தேதி ஜெகதீப் தங்கர் பதவியேற்க உள்ளார். குடியரசு துணைத் தலைவராகத் தேர்வான அவர் மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார். ராஜஸ்தானில் பிறந்த ஜெகதீப் தங்கர், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் இருந்து எம்.எல்.ஏ.ஆக தேர்வான அவர், எம்.பி.யாகவும், மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.