நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார். பழங்குடியின பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கி, நாட்டின் முதல் குடிமகள் என்ற உயர்நிலைக்கு, திரெளபதி முர்மு உயர்ந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தாம் பதவியேற்பதற்கு முன், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற அவரை, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடைபெற்ற ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து குடும்பத்துடன் வரவேற்றார். இதையடுத்து இருவரும் குதிரைப்படை சூழ நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டனர்
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைக்க நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து குடியரசுத் தலைவராக தனது முதலாவது உரையை நிகழ்த்திய திரௌபதி முர்மு, வேலுநாச்சியார், லட்சுமிபாய் ஆகியோர் புதிய துணிச்சல்களை இந்திய பெண்களுக்கு தந்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ காரில் திரௌபதி முர்மு, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜனாதிபதி மாளிகை வந்த நிலையில், முப்படையினரின் அணிவகுப்பை வாகனத்தில் சென்று பார்வையிட்டு, அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ஆசிரியையாக தனது பணியை தொடங்கிய ஒடிசா பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, பாஜகவில் இணைந்து வார்டு கவுன்சிலர், எம்.எல்.ஏ., மாநில அமைச்சர், ஆளுநர் என பதவி உயர்வு பெற்று தற்போது நாட்டின் முதல் குடிமகள் என்ற நிலையை எட்டியுள்ளார்.