குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெற உள்ளதை ஒட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் முடிகிறது.
இதனை அடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற செயலக வளாகத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் இன்று நடைபெறுகிறது.
மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க இருக்கின்றனர். எம்.பி.க்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், எம்.எல்.ஏ.வுக்கு 'பிங்க்' நிற வாக்குச்சீட்டும் வழங்கப்படும்.
இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை வருகிற 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது முடிவுகள் அறிவிக்கப்படும்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வாக்களிக்க பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்