கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் நொடிக்கு ஒரு இலட்சத்து எட்டாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து பாசனத்துக்கு நொடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 72 ஆயிரத்து 700 கன அடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து 35 ஆயிரத்து 333 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் இன்று காலையில் நொடிக்கு ஒரு இலட்சத்து எட்டாயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
நீர் வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளை மூழ்கடித்துத் தண்ணீர் பாய்கிறது. இதனால் அருவிப் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லவும், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரந்து விரிந்து புதுவெள்ளம் பாயும் டிரோன் காட்சி வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் ஐந்தடி உயர்ந்து உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் 13 ஆயிரத்து 513 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.