இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டும் அல்ல, ஜனநாயகத்தின் தாய் நாடே அதுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா முதிர்ந்த ஜனநாயகத்தை நோக்கி வெற்றி நடை போடுவது குறித்து அவர் பெருமை தெரிவித்தார்.
பீகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு முதன் முறையாக பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் மோடியை வரவேற்றார்.
மக்களின் பிரதிநிகள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறவர்களாக அவர்களின் கனவுகளை நிறைவேற்றுபவர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்தியா முதிர்ந்த ஜனநாயக நாடாக முன்னேறுவது குறித்து பெருமையும் திருப்தியும் அடைவதாக மோடி கூறினார்.
இந்தியாதான் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பார்கள். அது மட்டும் அல்ல ஜனநாயகத்தை ஈன்ற தாய் நாடே இந்தியாதான் என்றும் பிரதமர் மோடி தமது பேச்சில் குறிப்பிட்டார்.
பாட்னாவில் பிரதமர் மோடி கல்பதரு மரத்தின் விதையை நட்டு சட்டமன்ற நினைவுத் தூணை திறந்து வைத்தார். நூலகம் மற்றும் விருந்தினர் மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 401 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல வளர்ச்சிப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.