திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சை பெறச் சென்ற கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், பெண்ணை தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
நேற்றிரவு 10 மணிக்கு கர்ப்பிணி மருத்துவமனைக்கு சென்ற நிலையில், பணியில் இருந்த மருத்துவர் பாலகிருஷ்ணன் முதலுதவி சிகிச்சை அளிக்க அங்கிருந்த படுக்கையில் ஏறி படுக்குமாறு பெண்ணிடம் கூறியுள்ளார்.
படுக்கை உயரமாக இருந்ததன் காரணமாக, கர்ப்பிணி அங்கிருந்த மர ஸ்டூலில் அமர முயன்றதால், ஆத்திரமடைந்த மருத்துவர் ஸ்டூலை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
கோபமடைந்த கர்ப்பிணியின் பெற்றோர் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மருத்துவர் அவர்களை தரக்குறைவாக பேசி அங்கிருந்து வெளியேறும் படி கூறியதை கர்ப்பிணி வீடியோ எடுத்து வெளியிட்டார்.
இது தொடர்பாக மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மானாமதுரை மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலகிருஷ்ணன், அங்கு பிரச்சனை ஏற்பட்டு திருப்புவனம் மருத்துவமனைக்கு பணி மாறுதல் ஆகி வந்ததாக கூறப்படும் நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.