ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 45 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்...
உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. அதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது, உணவு செறிவூட்டுதல், பொது விநியோக அமைப்பு முறை தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் பேசிய பியூஷ் கோயல், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 45 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான அட்டைகளை வழங்க, ஒரே நாடு ஒரே ரேஷன் முறையை பயன்படுத்தப்பட உள்ளதாக பியூஷ் கோயல் குறிப்பிட்டார். ஆரோக்கியமும் உணவும் இயற்கையாகவே ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை விநியோகிப்பது அவசியமானது என பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து மாநிலங்களும் நெல் மற்றும் கோதுமை விதைப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம், ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் சர்வதேச அளவில் அவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதால் விவசாயிகளும் பயனடைவார்கள் என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.