உலகளாவிய இடையூறுகள் இருந்த போதும் கடந்த ஆண்டில் 50 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் புதிய வளாகமான வணிக பவனைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் வகையிலான நிர்யாத் என்கிற புதிய இணையத் தளத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார். இந்தத் தளத்தில் ஆண்டுவாரியாக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி பற்றிய தகவல்களைப் பெற முடியும்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, தாளில்லாத டிஜிட்டல் அலுவலகமான வணிக பவனும், வெளிநாட்டு வணிகம் குறித்த நிர்யாத் இணையத்தளம் ஆகியன தற்சார்பு இந்தியாவுக்கான நமது விருப்பங்களைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
இது வணிகத்தில் குறிப்பாகச் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு உலகளாவிய இடையூறுகள் இருந்தபோதிலும் இந்தியா 50 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்றுமதி இன்றியமையாதது என்றும், உள்ளூர்ப் பொருட்களைத் தயாரிக்க ஊக்கப்படுத்தியதே ஏற்றுமதியை விரைவுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.