டெல்லியில் பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தாழ்வாரத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, கொரோனா சூழல், நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
டெல்லியில் பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தாழ்வாரத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பிரகதி மைதானத்தில் பொருட்காட்சியைக் கண்டுகளிக்கச் செல்வோர் தடையின்றிச் சென்று வர வசதியாக 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்தில் சுரங்கப்பாதை, ஐந்து சுரங்கப்பாதைக் கடவுகள், போக்குவரத்து வசதி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
பிரகதி மைதான மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.
உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தாழ்வாரத்தை வாகனத்தில் சென்றபடி பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தத் தாழ்வாரம் திறக்கப்பட்டுள்ளதால் பைரான் சாலையில் இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல் பாதியாகக் குறையும்.
பிரகதி மைதான் தாழ்வாரத்தில் ஐடிஓ சுரங்கவழிப் பாதையில் நடந்து சென்ற பிரதமர் மோடி அங்குக் கிடந்த தாள், பாட்டில் ஆகியவற்றைத் குப்பைத் தொட்டியில் போடுவதற்காக எடுத்துச் சென்றார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா சூழலில் பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தாழ்வாரத் திட்டத்துக்குப் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
பலர் நீதிமன்றத்தை நாடியதால் இடையூறு ஏற்பட்டதாகவும், அதையெல்லாம் தாண்டிப் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் பல பத்தாண்டுகளுக்கு முன் பிரகதி மைதானம் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதை மேம்படுத்தும் திட்டம் ஏட்டளவிலேயே இருந்ததாகவும், பல இடையூறுகளுக்கு இடையே அந்தத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.