நித்திக்கு என்ன தான் ஆச்சி என்று ஆசிரமவாசிகள் காத்திருக்கும் நிலையில் சமாதி நிலையில் இருக்கும் நித்தியின் சிலைகளை வைத்து பிடதி ஆசிரமத்தில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான நித்தி தனக்கென்று கைலாசா என்ற தேசத்தை கட்டமைத்து விட்டதாக கப்சா விட்டு வெளி நாட்டில் பதுங்கி வாழ்வதாக கூறப்பட்டது. அவர் இறந்து போனதாக கடந்த ஒரு மாதமாக தகவல் பரவி வரும் நிலையில் நித்தி சமாதி நிலையில் இருப்பதாக அவரது ஆசிரமத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்ட போதும், அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரமாக இது வரை ஒரு வீடியோ கூட வெளியாக வில்லை.
விரைவில் சத்சங்கத்தில் தோன்றுவேன் என்று கூறி ஒரு மாதம் கடந்து விட்டாலும் இதுவரை நித்தியின் தரிசனம் அவரது பக்தர்களுக்கும், அவரை தேடிவரும் போலீசாருக்கும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலையில் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் வித விதமான கெட்டப்புகளில் செய்யப்பட்ட நித்தியின் சிலைகளை வைத்து மூன்று கால பூஜைகளை அவரது பக்தர்கள் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நித்தி சமாதி நிலையில் நித்திரையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆசிரமத்தில் அவரது சிலைகளுக்கு பூஜை நடப்பதால், நித்தி திரும்பிவருவாரா ? என்று சமூக வலைதளங்களில் சந்தேக கேள்விகள் எழுந்தன.
இது தொடர்பாக நித்தியானந்தா ஆசிரம வாசிகள் கூறும் போது, கைலாசாவில் உள்ள நித்தியானந்தேஸ்வராவுக்கு சித்ரா நட்சத்திரம் உகந்தது என்பதால் அதை கொண்டாடும் விதமாக நித்தியின் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டதாகவும் , தங்கள் ஆசிரமத்தில் உள்ளோருக்கு அவர் தான் கடவுள் என்பதால், அவர் சிலைகளை வைத்து வழிபட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
பாலியல் வழக்கில் சிக்கி சர்வதேச போலீசுக்கே சவால் விட்டு தலைமறைவாக இருக்கும் நித்தி பெயரில் சமூக வலைதளத்தில் அறிக்கை பதிவிடும் நபர்களை வைத்து நித்தியின் மறைவிடத்தை கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.