இந்தியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப் போவதாக அல்கொய்தா விடுத்த மிரட்டலையடுத்து, முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாஜக-வைச் சேர்ந்த நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை அடுத்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ((14 நாடுகள் இந்தியாவுக்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தன.))
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அச்சுறுத்தல் நீடிப்பதாக OIC என்ற சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்ட கண்டனத்தை இந்தியா மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்று நிராகரித்துள்ளது.
டெல்லி, மும்பை, உத்தரப்பிரதேசம் குஜராத் உள்ளிட்ட இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா விடுத்த மிரட்டல் கடிதம் சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்த மிரட்டலின் தன்மையை ஆராய்ந்து வரும் அதே வேளையில் முக்கிய நகரங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், மெட்ரோ, விமான நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.
எந்த ஒரு சந்தேகத்திற்குரிய செயலையும் உடனுக்குடன் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கும் போலீசாருக்கும் அறிவுறுத்தியிருப்பதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.