கூட்டுறவு அமைப்புகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய உதவும் வகையில், அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், கூட்டுறவு அமைப்புகள் அரசு இ-சந்தை மூலம் பொருட்களை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், இனி கூட்டுறவு அமைப்புகளும் பொருட்களை வாங்குவோர் பட்டியலில் இணைக்கப்பட்டு அரசு இ-சந்தை மூலம் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெIndiaரிவித்தார்.
2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு இ-சந்தையில் மத்திய- மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதித்திருப்பதன் மூலம் 27 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள 8 கோடியே 54 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகள் பயனடைவார்கள்.ஆயினும் கூட்டுறவு அமைப்புகளிடம் இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையால் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சந்தை உருவாகும் என்றும் கூட்டுறவு அமைப்புகள் வெளிப்படையாக சரக்குகளை வாங்க அரசு இ சந்தை பயன்படும் என்றும் கூட்டுறவுத்துறை பொறுப்பையும் வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.தற்சார்பு பாரதம் என்ற அரசின் கொள்கைக்கும் இது மிகப்பெரிய வளர்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.