கேரளாவில் அழகு நிலையம் முன்பு நின்று செல்போன் பேசியதால் தனது கடையின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மலைவாழ் பெண்ணை , அவரது மகள் கண் முன்பே அழகு நிலைய பெண் உரிமையாளர் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.
மருதங்குழி மலைகிராமத்தை சேர்ந்த சேபா என்ற பட்டதாரி பெண் தனது நகையை அடகு வைப்பதற்காக தனது மகளுடன் சாஸ்தமங்கலம் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார்.
மீனாவுக்கு சொந்தமான பியூட்டி பார்லர் முன்பு உள்ள பிளாட்பாரத்தில் நடந்து சென்ற போது சேபாவின் செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
அங்கு நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதைக் கடைக்குள் இருந்து பார்த்த மீனா, கருப்பு நிற பெண் தனது பார்லர் முன்பு நின்று செல்போன் பேசுவதால், கடையின் அழகு கெட்டுப்போவதாக கருதி மலை கிராம பெண்ணான சேபாவிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
எந்த தவறும் செய்யாத தான் எதற்காக தாக்கப்படுகிறோம் என்று தெரியாமல் சேபா பதறிபோன நிலையில் , அடங்காத மீனா, அவரது துப்பட்டாவை பிடித்து கீழே இழுத்து போட்டதுடன் சேபாவையும் கீழே தள்ளிவிட்டார்.
தனது தாய் தாக்கப்படுவதை தடுக்க இயலாமல் சிறுமியான அவரது மகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, மீனாவோ, மலைகிராம பெண்ணை தனது காலில் கிடந்த செருப்பை கழட்டி தாக்கி அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.
வெள்ளையாக பிறப்பதும் கருப்பாக பிறப்பதும் அவரவர் கையில் இல்லை என்பதை உணராமல் நிறவெறியுடன் மலைக்கிராம பெண் சேபா தாக்கப்பட்ட சம்பவம் மனித நேயமற்ற செயல் என்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் மீனாவின் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் மலைக்கிராம இளைஞர் ஒருவரை பசிக்கு அரிசி திருடியதாக குற்றஞ்சாட்டி சிலர் அடித்தே கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.