குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்துள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்க உள்ள இந்தோ பசிபிக் பொருளாதார திட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு டோக்கியோ புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை அவர் டோக்கியோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.
பிரதமர் மோடியுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்துகிறது. முன்னதாக டோக்கியோ செல்லும் முன்பு மோடி விடுத்த டிவிட்டர் செய்தியில் இந்தோ பசிபிக் தொடர்பாகவும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகவும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தோ பசிபிக் பொருளாதார திட்டத்தை இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்க உள்ளார். இதில் பங்கேற்பது பிரதமர் மோடியின் முக்கியத் திட்டமாகும். இத்திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர், சீனாவின் ராணுவ அத்துமீறல்கள், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளையும் மோடி உலகத் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார். 40 மணி நேர ஜப்பான் விஜயத்தில் 23 முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.