நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வாதாடிய பெண் வழக்கறிஞரை, எதிர்கட்சிக்காரர் விரட்டி விரட்டி எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கிடையே வாதங்களை எடுத்து வைப்பதில் கருத்து மோதல் இருக்கும். அப்படி வாதத்தை எதிர் கொள்ள இயலாமல் வழக்கில் தோல்வியை சந்திக்கும் நிலையை அடைந்த எதிர்கட்சிக்காரர் ஒருவர் தனக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞரை பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது
பாகல்கோட்டையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா. சனிக்கிழமை சங்கீதா தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றபோது அங்கு வந்த மஹாந்தேஷ் என்பவர் திடீரென சங்கீதாவை மறித்து கொடூரமாக தாக்க தொடங்கினார்.
சுதாரித்துக் கொள்ள முயன்றும் விடாமல் வழக்கறிஞர் சங்கீதாவை விரட்டி விரட்டி காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார் மஹாந்தேஷ்
காப்பாற்றுமாறு அவர் உறவினர்கள் கூச்சலிட்டாலும் அவரை காப்பாற்ற ஒருவர் கூட முன்வரவில்லை. மஹாந்தேஷ் அங்கிருந்து சென்ற பின்னர், தாக்குதலில் படுகாயமடைந்த சங்கீதாவை பொதுமக்கள் மீட்டு பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், வழக்கறிஞர் சங்கீதா, எதிர்கட்சிகாரரான மஹான்தேஷ்க்கு எதிரான வழக்கை திறம்பட வாதாடி அவருக்கு தண்டனை பெற்றுத்தரும் சூழலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மிரட்டிப் பார்த்தும் அஞ்சாமல் நீதிமன்றத்தில் வாதாடிய சங்கீதாவை அச்சுருத்தும் நோக்கில் கடுமையாக தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட மஹான் தேஷை போலீசார் தேடிவருகின்றனர்.
பெண் வழக்கறிஞர் ஒருவர் பொது வெளியில் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.