மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயமடைந்தனர்.
போயிசர் நகரில் செயல்பட்டு வரும் ஸ்டீல் தொழிற்சாலையில் நிறுவனத்தினருக்கும் மற்றும் தொழிலாளர் சங்கத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை வளாகத்தில் நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை திடீரென தாக்க தொடங்கினர்.
தகவலறிந்து விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றபோது, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 19 காவலர்கள் காயமடைந்த நிலையில், 12 வாகனங்களும் சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.