தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், 2021 நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததை போல மாநிலங்கள் குறைக்கவில்லை எனவும் மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், தான் யாரையும் விமர்சிக்கவில்லை, ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைத்து மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாவதாகவும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூற்று 11 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.