பிரதமர் நரேந்திர மோடி மே 2, 3, 4 ஆகிய நாட்களில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செல்கிறார்.
2022ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதலில் ஜெர்மனிக்குச் செல்லும் மோடி, பெர்லினில் பிரதமர் ஒலாப் சோல்சைச் சந்தித்துப் பேச உள்ளார். இருவர் தலைமையில் இந்திய - ஜெர்மனி அரசுகளிடையான பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
இரண்டாவதாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்குச் செல்லும் மோடி, அந்நாட்டுப் பிரதமர் மெட் பிரெடரிக்சனைச் (Frederiksen )சந்தித்துப் பேசுவதுடன், இந்திய நார்டிக் மாநாட்டிலும் பங்கேற்கிறார். பயணத்தை முடித்து நாடு திரும்பும் வழியில் மே நான்காம் நாள் பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேச உள்ளார்.