நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் 3 தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் சிறார்களுக்கு செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இம்மாத தொடக்கத்தில் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 795ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 483 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியானது. டெல்லி, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொற்று பரவலை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமின்றி சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்தும் வகையில், நிபுணர் குழு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த நிலையில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
அதேபோல், பயலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயதிற்குட்ட சிறார்களுக்கும், சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயதிற்கு மேற்பட்டோருக்கும் அவசர கால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.