ஓலா நிறுவனம், 1,441 எஸ் ஒன் புரோ ரக மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப் போவதாக அறிவித்துள்ளது.
மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டதால், விபத்துக்கான காரணத்தை கண்டறிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வதில் கவனக்குறைவாக செயல்பட்டால், பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்திருந்தார்.
இதையடுத்து ஒகினவா நிறுவனம் 3,000 மின்சார ஸ்கூட்டர்களையும், பியூர் ஈ.வி நிறுவனம் 2,000 மின்சார ஸ்கூட்டர்களையும் திரும்ப பெறப்போவதாக அறிவித்தன.
கடந்த மாதம், ஓலா நிறுவனத்தின் எஸ் ஒன் புரோ மின்சார ஸ்கூட்டர் ஒன்று புனேவில் தீப்பிடித்து எரிந்ததால், அதே பேட்சில் தயாரிக்கப்பட்ட 1,441 ஸ்கூட்டர்களையும் திரும்பப் பெற்று முழுப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.