கொரோனா பரவி வருவதையடுத்து டெல்லி உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து சில மாநில அரசுகள் முக்கிய நகரங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.
இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் புதிய பாதிப்புகள் சில நாட்களாக அதிகரித்துள்ளன.கொரோனா அலை வேகமாகப் பரவி வருவதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முகக் கவசத்தை மீண்டும் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்ரா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள பெரும்பாலான நகரங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், ஜஜ்ஜார் ஆகிய நான்கு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேச அரசும் லக்னோவில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியைப் பொருத்தவரை நேற்று 632 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.