குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பண்டைய கால அறிவையும், நவீன அறிவியலையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இம்மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.
பாரம்பர்ய மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்லும் வகையில் குஜராத் மாநிலத்தில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் அமைக்கப்பட உள்ளது. ஜாம்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இம்மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மொரீஷியஸ் பிரதமர் பிரவீன் குமார் ஜக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனரான டெட்ராஸ் அதானோம் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு குஜராத்தி மொழியில் வணக்கம் தெரிவித்து தனது உரையை டெட்ராஸ் அதானோம் தொடங்கினார். ஆதாரத்தின் அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்தவும், அறிவியலின் ஆற்றலைப் பயன்படுத்தவும் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் உதவும் என அவர் கூறினார். மையம் அமைக்க 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மொரீஷியஸ் பிரதமர் பிரவீன் குமார் ஜக்நாத், பாரம்பரிய மருந்துகள் தொடர்பாக தரவுகள், ஆதாரங்கள் சேமிக்கவும், விலை குறைந்த பாரம்பர்ய மருந்துகள் தொடர்பாக ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த மையம் பேருதவி புரியும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த மையத்தை மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு பெரிய பொறுப்பாக இந்தியா எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். பாரம்பரிய மருந்துகளின் ஆதரவுடன் உலகிற்கு சிறந்த மருத்துவ தீர்வுகளை வழங்கவும் இந்த மையம் உதவும் என பிரதமர் குறிப்பிட்டார். நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் பாரம்பர்யம் உலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர் கூறினார்.