ஆந்திராவில் வேதியியல் தொழிற்சாலையில் அணு உலை வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஏலூரு மாவட்டத்திலுள்ள அக்கிரெட்டிகுடிம் என்ற பகுதியில் அமைந்துள்ள வேதிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்றிரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொழிற்சாலையின் நான்காவது யூனிட்டில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு அணு உலை வெடித்து தீப்பற்றியது. இதனால், நான்காவது யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அங்கு சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
14 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.