மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் வீட்டிற்கு முன் காலணிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாநில போக்குவரத்து ஊழியர்கள் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அரசு பணியாளர்களுக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்து துறையை அரசுடன் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 5 மாதங்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பாதுகாப்பை மீறி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து காலணிகளை வீசி எறிந்தனர்.
மேலும், அவர்கள் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலேவை சூழ்ந்து கொண்டு,முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.