இலவசம் வழங்கும் போக்கைத் தடுக்காவிட்டால் இலங்கையில், கிரீசில் வந்தது போல் நிதி நெருக்கடி ஏற்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சகங்களின் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உயர் அதிகாரிகள் சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் திட்டங்களும், இலவசங்களும் பொருளாதார ரீதியில் தொடர்ந்து செயல்படுத்த முடியாதவை எனத் தெரிவித்தனர்.
இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கையில், கிரீசில் வந்தது போல் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் எச்சரித்தனர். பல மாநிலங்கள் ஆபத்தான நிதிநிலையைக் கொண்டுள்ளதாகவும், அவை மத்திய அரசுடன் இணைந்திருக்காவிட்டால் சிதைந்துபோய்விடும் என்றும் தெரிவித்தனர்.
பஞ்சாப், டெல்லி, ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்க மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த முடியாதவை எனக் குறிப்பிட்டனர்.
இலவச மின்சாரம் வழங்குவதாகப் பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பட்ஜெட்டில் பெருந்தொகை ஒதுக்க வேண்டியிருக்கும் என்றும், அவ்வாறு ஒதுக்கினால் கல்வி, நலவாழ்வு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துபோகும் என்றும் தெரிவித்தனர்.