மகாராஷ்டிரத்தில் நேற்றிரவு வானில் எரிகற்கள் தென்பட்ட நிலையில் சந்திரப்பூர் மாவட்டத்தில் உலோக வளையமும், உருண்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் உலவும் கற்கள் இரவில் வளிமண்டலத்தில் நுழைந்து புவிப்பரப்பை நோக்கி வரும்போது வெப்பத்தால் எரிந்து எரிகற்களாக வந்து சேர்கின்றன.
அதிக வெப்பத்தில் இளகி உருகும் இக்கற்கள் புவியை வந்தடைந்தவுடன் மீண்டும் உறைந்துவிடும். விண்கற்கள், எரிகற்கள் விழுவது பொதுவாக இரவில் எப்போதாவது வானில் தென்படும். அதேபோல் நேற்றிரவு மகாராஷ்டிரத்தின் பல மாவட்டங்களில் வானில் இருந்து எரிந்துகொண்டே புவியைநோக்கி வந்த பொருட்கள் தென்பட்டுள்ளன. பலர் இதைப் பார்த்துள்ள நிலையில் சிலர் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சந்திரப்பூர் மாவட்டத்தின் சிந்திவாகி வட்டத்தில் ஓர் ஊரில் மூன்று மீட்டர் சுற்றளவு கொண்ட உலோக வளையத்தைக் கண்டெடுத்துள்ளனர். இரவில் கண்டபோது அது மிகவும் சூடாக இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மற்றொரு ஊரில் ஓர் உருண்டையைக் கண்டெடுத்துள்ளனர். இவை வானில் இருந்து விழுந்ததுபோல் இருந்ததாக ஊர்மக்கள் கூறியதாக வட்டாட்சியர் கணேஷ் ஜக்தலே தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீனா ஏவிய ராக்கெட்டின் எச்சம் விண்வெளியில் மிதந்து மீண்டும் புவிக்கு வந்திருக்கலாம் என்றும், அதுவே மகாராஷ்டிரத்தில் தென்பட்டிருக்கலாம் என்றும் வானியலாளர் ஜோனதன் மெக்டவல் தெரிவித்துள்ளார்.