இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிகத்துக்கான உடன்பாடு கையொப்பமாகியுள்ளது. இருநாடுகளிடையான வணிகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று இலட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய - ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிகத்துக்கான உடன்பாடு காணொலி மூலம் கையொப்பம் ஆனது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 85 விழுக்காடு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகும் 96 விழுக்காடு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் இந்த உடன்பாடு வகை செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளும் தங்கள் தேவைகளை நிறைவுசெய்யும் அளவில் மிகப்பெரும் வளங்களைக் கொண்டுள்ளதாகவும், இந்த உடன்பாட்டால் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் இரண்டாயிரத்து 140 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இந்த உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளிடையான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் மேம்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், பெருந்தொற்றுக் காலத்தில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்ததாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதன்மூலம் இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.