ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சிக்காலத்தில் பெகாசஸ் உளவு செயலியை வாங்கி பயன்படுத்தியதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசாஸ் ஸ்பைவேர் என்ற உளவுபார்க்கும் செயலியை, மத்திய அரசு வாங்கி முக்கிய பிரபலங்களின் செல்போன்களை ஒட்டு கேட்டதாக கூறப்படும் புகார் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுபடி உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவர் முதலமைச்சராக இருந்த போது பெகாசஸ் செயலியை பயன்படுத்தியதாக கூறியுள்ள YSR காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் Gudivada Amarnath, ஒய்.எஸ்.ஆர். கட்சியின் பல்வேறு அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2 நாட்களுக்கு முன் இதே குற்றச்சாட்டை மம்தா பானர்ஜியும் முன்வைத்திருந்த நிலையில், தற்போது YSR காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது. இதனிடையே, பெகாசஸ் செயலி வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மறுத்துள்ளது.