வட மாநிலங்களில் ஹோலிப்பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. நாளை ஹோலியை முன்னிட்டு வண்ணப் பொடிகள், இனிப்புகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
வசந்த காலத்தின் வருகையை தெரிவிக்கும் ஹோலிப் பண்டிகை இந்தியா நேபாளம் வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், டெல்லி, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஹோலிப் பண்டிகையின் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
வண்ணப் பொடிகள், வண்ண நீர் நிரம்பிய பலூன்கள், வண்ண நீரைப் பீய்ச்சும் குழல்கள், தண்ணீர்த் தொட்டிகள் என பலவகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசி மகிழ்கின்றனர்
வாரணாசியில் உள்ள சந்தையில் ஹோலிக்கான வண்ணப் பொடிகளும் பொருட்களும் அதிகளவில் விற்பனையாகின.
ஹோலிகா என்ற அரக்கி தீ மூட்டி பக்த பிரகலாதனை எரிக்க முயன்ற போது கண்ணனால் அரக்கி ஹோலிகா தீயில் தகனம் செய்யப்பட்டு பிரகலாதன் நெருப்பில் இருந்து உயிர் பெற்று எழுந்ததாக புராணம் கூறுகிறது.
இதனால் பல இடங்களில் ஹோலிகா தகனம் செய்ய மரக்கட்டைகளை அடுக்கி மக்கள் தீ மூட்டினர். பல ஊர்களில் ஹோலிப் பண்டிகைக்காக சிறப்பு இனிப்பு வகைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஹோலியைக் கொண்டாடினர்.
அசாமின் நாகானில் ஹோலி கொண்டாட்டத்தையொட்டி ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
குஜராத்தின் கிருஷ்ணா நகரில் ஹோலி மற்றும் ஊரின் ஆண்டு விழாவையொட்டிப் பெண்கள் கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.