தமிழக போலீசார் முதல் குஜராத் போலீசார் வரை பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரௌடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்த நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகனை கடந்தாண்டு டிசம்பரில் பவானி போலீசார் பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டரை அவன் தாக்கினான் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அவனைத் தேடும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், நாங்குநேரி அருகே களக்காடு மலையடிவாரத்தில் நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அவனைப் பிடிக்க முயன்றபோது பயங்கர ஆயுதங்களால் நீராவி முருகன் தாக்கியுள்ளான். இதில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உட்பட 4 போலீசார் காயமடைந்தனர். இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் உயிரிழந்தான்.