ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
அம்மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, அம்மாநில அரசு சில நாட்களுக்கு கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதன் மீதான விசாரணை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். இதனிடையே, பெங்களூருவில் நாளை முதல் வரும் 21ஆம் தேதி வரை ஒரே இடத்தில் மக்கள் கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.