இந்தியாவின் தொலைதூர கிராமங்கள், சிறு, குறு நகரங்களில் இருந்து ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை டிரோன் மூலம் விரைவாக சேகரித்து கொண்டுவருவதற்கான சோதனை ஓட்டத்தை பெங்களூரின் ஸ்கை ஏர் மொபிலிட்டி என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக அந்த நிறுவனம் டெல்லியின் ரெட் கிளிஃப் லேப்ஸ் என்னும் மருத்துவ பரிசோதனை மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் விவசாய சேவை துறைகளில் டிரோன் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ஓட்டத்தை ஸ்கை ஏர் மொபிலிட்டி தொடங்கியுள்ளது.
5 கிலோ எடை வரை மாதிரிகளை சுமந்து செல்லும் இந்த டிரோன்கள், 400 அடி உயரத்தில் பறந்து, 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.