உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் எண்ணமில்லை என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலைநாடுகள் அணு ஆயுதப் போர் பற்றிப் பேசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விமானப் போக்குவரத்து, விண்வெளித்துறை சார்ந்த ரஷ்ய நிறுவனங்கள் பிரிட்டன் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுச் சேவைகளைப் பெறுவதைத் தடை செய்துள்ளதாக பிரிட்டன் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
கசக்கஸ்தானில் ரஷ்யாவுக்குச் சொந்தமான பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதை நிறுத்திக்கொள்வதாக பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒண்வெப் அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்த் தொழிலதிபரும் புடினின் நெருங்கிய நண்பருமான இகோர் செச்சினுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பலை பிரான்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஐக்கியா நிறுவனம் ரஷ்யாவிலும் பெலாரசிலும் உள்ள தொழிற்சாலைகளின் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வதாகவும், இதனால் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.