உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது ஒரே நேரத்தில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
உக்ரைன் நாடு மீது கடந்த 24-ந்தேதி போர் தொடுத்த ரஷியா, தொடர்ந்து நான்கு நாட்கள் மிதவேகத்தில் தாக்குதலில் ஈடுபட்டது. ஐந்தாவது நாளில் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் தாக்குதல் வேகத்தை குறைத்தது. முதல் சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுமென தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போரின் ஆறாவது நாளான இன்று மிக பெரிய அளவில் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் கீவ், கார்கீவ், செர்னகீவ் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய ராணுவம் தாக்கி வருகிறது.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு குண்டுகள் வீசப்பட்டதில் 11 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
இதனிடையே உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சன் நகரை தாக்கத் தொடங்கியுள்ளது ரஷிய ராணுவம். நகரம் ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டதாகவும். ஆனால் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்றும் கெர்சன் நகர நிர்வாகம் சமூக ஊடங்களில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கார்கிவ் நகரில் இன்று காலையில் நடைபெற்ற சண்டையில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாலகிரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற அந்த மாணவர், கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலை கழகத்தில் படித்து வந்தார் என்றும், காலையில் அவர், தமது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்ற போது, ஏவுகணை வீச்சில் சிக்கி உயிரிழந்ததாகவும் அரிந்தம் பக்தி கூறியுள்ளார்.