உக்ரைனில் சிக்கியுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் கங்கா நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 1,100க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பியுள்ள நிலையில், தொடர்ந்து விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் போலந்து, ரூமேனியா மற்றும் ஹங்கேரி தூதரக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால், அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 5 விமானங்களில் 1,100க்கும் மேற்பட்டோர் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில், அடுத்து 7 விமானங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 249 பயணிகளுடன் புகாரெஸ்ட்டில் இருந்து ஒரு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
இதனிடையே, உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களை 10 பேருந்துகள் மூலம் மீட்கும் நடவடிக்கையில் போலந்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. Shehyni பகுதியில் இந்தியர்களை பேருந்து மூலம் மீட்டு தூதரகம் தயார்படுத்தி உள்ள குடியிருப்புகளில் தங்கவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போலந்து தூதரகம் வெளியிட்டுள்ளது. லிவிவ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்கள் அங்கேயே இருக்குமாறும் அறிவிப்பு வரும் வரை வேறெந்த இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.