உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 20 அதிகாரிகள் கொண்ட குழு இயங்கி வருவதாக வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிரிங்களா தெரிவித்து உள்ளார்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ் வர்தன் சிரிங்களா, உக்ரைனில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பொது மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழு கட்டுப்பாட்டு அறை மூலம் 950 அழைப்புகளுக்கும், 850 மின்னஞ்சல்களுக்கும் பதிலளித்துள்ளதாக தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் வெளியுறவுத்துறைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.