தேசியப் பங்குச்சந்தை முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசியப் பங்குச்சந்தை மேலாண்மை இயக்குநராகச் சித்ரா பணியாற்றினார். அப்போது சித்ரா தனது ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்ததில் விதிமீறல் உள்ளதாகக் கூறி செபி அமைப்பு விசாரித்து வருகிறது.
பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை இமயமலையில் உள்ள சாமியாரிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை கோட்டூர்புரத்திலும், சேலையூரிலும் சித்ராவுக்குத் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்புப் புகாரையடுத்து இந்தச் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.