புவி கண்காணிப்புக்கான அதிநவீன ரேடார் செயற்கைக்கோள் உட்பட மூன்று செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி 52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி 52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் மூலம் இஓஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளும், இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு மாணவர்கள் வடிவமைத்த சிறிய ரக இன்ஸ்பயர் சாட் -1 செயற்கைகோளும், இந்தியா, பூட்டான் நாடுகள் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ள ஐ.என்.எஸ் - 2TD என்ற சிறிய ரக செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.
புவியில் இருந்து 529 கிலோமீட்டர் உயரத்தில் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப் பாதையில் சரியாக காலை 6.17 மணிக்கு 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
புவி கண்காணிப்பு மற்றும் வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகளாகும்.
இந்த செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.இஸ்ரோ தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும்.
அதேபோல், இந்த ஆண்டில் இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும். பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இதைத் தொடர்ந்து நடப்பாண்டில்10-க்கும் மேற்பட்ட ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்துள்ளது.