டெல்லியில் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய முறையீட்டை ஏற்கத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
டெல்லியில் காற்று மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுக்கு மேல் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசு செய்த முறையீட்டை ஏற்கெனவே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
ஒரு டீசல் வாகனம் வெளியிடும் மாசு, 24 பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் மாசு அல்லது 40 எரிவாயு வாகனங்கள் வெளியிடும் மாசுக்குச் சமமாகும் எனத் தெரிவித்தது. இந்நிலையில் சரப்ஜித் சிங் என்கிற மாற்றுத் திறனாளி தாக்கல் செய்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாய அமர்வு, முடிவெடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இத்தகைய மனுக்களை எல்லா நேரத்திலும் அனுமதிக்க முடியாது எனக் கூறித் தள்ளுபடி செய்தது.