ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் சிக்கி, வீட்டுக் காவலில் இருந்த தென்கொரியர்கள் 2 பேர், வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரத்தில் தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
40 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்தாத முறைகேடு வழக்கில் சிக்கி, செங்கல்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக் காவலில் இருந்த தென் கொரிய மோசடி நபர்கள் இருவரும், தனியார் வாகனம் மூலம் ஐதராபாத்திற்கும், அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு தப்பிச் சென்றதும் பின் அங்கிருந்து தென் கொரியாவுக்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து வழியாக சர்வதேச எல்லையைக் கடந்து தப்பிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதால், வீட்டுக் காவலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்தியாவிலுள்ள தென்கொரிய தூதரக அதிகாரிகள் உதவியுடன் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கும் சிபிஐ, தூதரக அதிகாரிகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது.