கொரோனா சூழலில் எழுந்துள்ள சவால்களைச் சமாளிக்க இந்தோ - பசிபிக் மண்டல நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை எனக் குவாட் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனுடன் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினார். அப்போது இந்த நூற்றாண்டில் இந்திய - அமெரிக்க உறவு மிகவும் மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ஜெய்சங்கர், புவி அரசியல், புவிசார் பொருளாதாரச் சூழல் மிகவும் சிக்கலாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.
கொரோனா தாக்கத்தால், உலகளாவிய நலவாழ்வுப் பாதுகாப்பு, தடுப்பூசித் திட்டங்கள், தடுப்பு மருந்து வழங்கல் ஆகியவற்றுக்குக் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.